10-ம் வகுப்பிற்கான சிறப்பு துணைப் பொதுத் தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பிற்கான சிறப்பு துணை பொதுத் தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு 8ஆம் தேதி முதல் வரும் 12ஆம் தேதி வரை அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.
12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் 500 ரூபாய் கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதி திட்டத்தில் வரும் 23ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
மாணவர்கள், விண்ணப்பங்களை புதுச்சேரி முத்தியால்பேட் சோலைநகர் சாலையில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதி வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு, தேர்வு கட்டணமாக ரூ.125 மற்றும் பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
விதிமுறை
நேரடியாக விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சியில் கலந்துக்கொண்டு தேர்ச்சியடைந்ததன் அசல் வருகைச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்றுவர வேண்டும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்தமைக்கான அசல் மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில், குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, அரசு தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comentários